யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடும் மழை பொழியும்!! சூறாவளி அபாயம்
யாழ்ப்பாணம் உட்பட்ட வடபகுதி மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடும் காற்றுடன் கூடிய கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அருகில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் தற்போது நாட்டிற்குள் நுழைந்துள்ளது எனவும் இது சில வேளை புயலாக மாறி கடும் காற்றுடன் கூடிய கனமழையை உருவாக்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதே வேளை
நுவரெலியா, கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட பலபொக்குன பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்று காரணமாக மரம் ஒன்று வீடுகளின் மேல் சரிந்து வீழ்ந்ததால் இரு வீடுகளும் ஒரு லொறியும் சேதமடைந்துள்ளது.
இதனால் குறித்தப் பகுதியில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு திருத்த பணிகளை கொத்மலை மின்சார சபை மேற்கொண்டு வருகின்றது.
அனர்த்தம் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை கொத்மலை பிரதேச சபை அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் பொலிஸார், கிராம சேவகர் மற்றும் பொது மக்கள் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மேலும் சீரற்ற காலநிலையால் கொழும்பில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பாணந்துறை பகுதியில் மினி சூறாவளி ஒன்று ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த மினி சூறாவளியால் சுமார் 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதில் யாருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சீரற்ற காலநிலை: அவசர அறிவித்தல்….!
நாட்டில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும், அவசர அனர்த்த நிலைமைகளை உடனடியாக அறியத்தருமாறும் அவசர அனர்த்த நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு மக்களிடம் கோரியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவின் மேலதிக பணிப்பாளர், பிரிகேடியர் கே.ஜெ.ஜெயவீரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அனர்த்தம் தொடர்பில் கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்கலாம்.
இராணுவம் – 011 2 434 251 / 011 3 818 578
கடற்படை – 011 2 445 368 / 011 2 212 230 / 011 2 212 231
விமானப்படை – 011 2 343 970 / 011 2 343 971