யாழில் இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்களின் சூத்திரதாரிகள் என பொலிசாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களை , "தலைவா நீ 100 வருடம் வாழவேண்டும் என்று வாழ்த்திய இரு மாணவர்களை ஜூன் மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவு இட்டுள்ளார். யாழில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் நேற்று முன் தினம் இரு சந்தேக நபர்கள் கந்தரோடை பகுதியில் வைத்து சுன்னாக பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வாள் ஒன்றும் நீண்ட கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டு இருந்தது. இவர்கள் இருவரும் யாழில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் என்பது அதிர்ச்சி தகவல்.
அதன் போது குறித்த சந்தேக நபர்கள் , யாழில் இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்களின் சூத்திரதாரிகள் எனத் தேடப்பட்டு வரும் இரு சந்தேக நபர்களான "சன்னா" மற்றும் "தேவா" எனப்படுபவர்களுடன் தொடர்புகளை பேணி வந்ததாகவும் , அவர்களுக்கு கைத்தொலைபேசியில் "எங்கள் அண்ணா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். நாடு நல்லா இருக்க பல்லாண்டு வாழ வேண்டும். எங்கள் உயிரினும் மேலான எங்கள் அண்ணா என குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பியுள்ளதாக நீதவானின் கவனத்திற்கு இந்த குறுந்தகவல்களை பொலிசார் கொண்டு வந்தனர்.
அத்துடன் அவர்களது தொலைபேசியில் இருந்து அவர்கள் வாள் மற்றும் கத்தியுடன் விதம் விதமாக (போஸ்) எடுத்த படங்களையும் பொலிசார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.அதனை அடுத்து இருவரையும் எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டார். இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னரும் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் இரு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.