வித்தியா படுகொலை தொடர்பில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ்குமார் எவ்வாறு கொழும்பு சென்றார் என்பது தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்க பணிக்கப்பட்டுள்ள நிலையில் வி.ரி.தமிழ்மாறன் உள்ளிட்டவர்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளனர்.
நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றில் வித்யா வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சுவிஸ்குமார் யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்யப்பட்டாரா? அல்லது சரணடைந்தாரா? கைது செய்யப்பட்டிருந்தால் எந்த அதிகாரி அவரை கைது செய்தாரோ அவருடைய பெயர் விலாசம் சரணடைந்திருந்தால் எந்த பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார் அது தொடர்பில் பதியப்பட்ட பதிவுகள், அவர் நீதிபதி முன்னிலையில் முற்படுத்தப்பட்டிருந்தால் அது தொடர்பான அறிக்கை என்பவற்றை நீதிமன்று கோரியுள்ளது.
குறிப்பாக சுவிஸ்குமார் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டோ அல்லது சரணடைந்த சுவிஸ்குமார் எவ்வாறு கொழும்பு சென்றார், யார் அவரை கொழும்புவரை அழைத்துச்சென்றார்கள் அவர்களின் பெயர் விலாசம் மற்றும் கொழும்பில் அவர் எந்த பொலிசாரால் கைது செய்யப்பட்டாரோ அது தொடர்பான விரிவான அறிக்கையும் கோரப்பட்டுள்ளது.
குற்றச்செயல் இடம்பெற்ற காலப்பகுதியில் சுவிஸ்குமாரின் தொலை பேசி உரையாடல்களின் ஒலித்தொகுப்பு உள்ளிட்ட சகல விடயங்கள் தொடர்பிலும் ஒவ்வொன்றாக விரிவாக ஆராய்ந்து தெளிவாக தனித்தனியான அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
சுவிஸ்குமார் தப்பிக்க உதவியதாக முன்னணி சட்டவிரிவுரையாளர் வி.ரி.தமிழ்மாறன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.