14 May 2016

மாற்று அரசியலை உருவாக்க வேண்டும்: சீறும் சீமான்

தமிழகத்தில் அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ் இனம் எழுச்சி பெறுவதற்கு மாற்று அரசியலை உருவாக்க வேண்டிய காலக்கட்டம் ஏற்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது ‘ இனம், மொழி, கலை இலக்கியம், பண்பாடு, சிதைக் கப்பட்டுள்ளது. பாரம்பரிய வேளாண்மை முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. நம் கண்முன்னே கொத்து கொத்தாக இலட்சக் கணக்கான ஈழத் தமிழ் உறவுகள் கொன்று குவிக்கப்பட்டனர். அதனை கேட்பதற்கு கூட நாதியில்லாமல் இருக்கிறோம். தாய் திருநாட்டில் நிலம், காட்டு வளம், கனிம வளம் ஆகிய அனைத்தையும் காவு கொடுத்து நிற்கிறோம்.
கடந்த 50 ஆண்டு காலம் ஆண்ட ஆட்சியாளர்களால் கச்சத்தீவை பறி கொடுத்தோம், முல்லைப்பெரியாறு, காவிரி நதி நீர் பிரச்சினையில், நமது உரிமைகளை இழந்தோம். அணு உலை, மீத்தேன், கெயில் எரிவாயு திட்டங்களால் பாதிப்புகளையும், துன்பங்களையும் அனுபவித்து வருகிறோம். துயரங்களும், துன்பங்களும், நம்மை சுற்றி சுற்றியே துரத்திக் கொண்டிருக்கின்றன. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று பேசியவர்கள், எங்கும் ஊழல், எதிலும் லஞ்சம் என்கிற நிலையை ஏற்படுத்திவிட்டனர்.
இது தமிழினத்தின் வளர்ச்சிக்கு பேராபத்து. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் லஞ்சம், ஊழல் என்கிற பேச்சே இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று அப்படியா இருக்கிறது. எல்லா திசைகளிலும் லஞ்சமும் ஊழலும் புரையோடிக் கிடக்கிறது.
ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம், இதை செய்வோம் என்று கூறுபவர்கள் 50 ஆண்டுகளாக செய்யாதது ஏன்? இத்தனை ஆண்டுகளாக எதையும் செய்யாதவர்கள் இதற்கு மேலா செய்யப் போகிறார்கள்? தமிழ் இனம் இன்னுமா இதனை நம்ப வேண்டும். இன்னும் எத்தனை காலம் நம்மை ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
தன்மானத்தை இழந்து தமிழன் வாழ்வது தலை குனிவாக உள்ளது. தமிழர்களாகிய நாம் அனைவருமே சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழக அரசியலை மாற்றி அமைக்க இதுவே நமக்கான வாய்ப்பு. இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
Share: