தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் தங்கியிருந்த ஈழத்தமிழர்கள் பலர் தமது வாழ்வு சிறக்கும் என்ற வாக்குறுதிகளின் மத்தியில் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணிக்கின்றனர்.இவ்வாறு அவுஸ்திரேலியா நோக்கி ஜூன் 2 ஆம் நாள் புறப்பட்ட ஈழத்தமிழர்கள் 28 பேர் தமிழ்நாடு கரையோர காவற்துறையால் வழிமறிக்கப்பட்டனர்.
இவர்கள் தமக்காகக் காத்திருந்த படகை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே வழிமறிக்கப்பட்டனர். இவர்கள் தமது படகில் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணமாகியிருந்தால் செல்லும் வழியில் ஆழ்கடலில் படகு கவிழ்ந்து இறந்திருக்கலாம் அல்லது அவுஸ்திரேலியாவுக்கு வெளியேயுள்ள தீவுகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்பதை கடந்த கால சம்பவங்கள் சுட்டிநிற்கின்றன. ஆகவே இவர்கள் இந்தியக் கரையில் வைத்து கரையோரக் காவற்துறையினரால் வழிமறிக்கப்பட்டதானது நல்லதொரு வாய்ப்பாகும்.
சிறிலங்காவிற்குத் திரும்புவதற்குத் தயக்கமுறும் ஈழத்தமிழ் அகதிகளை தமிழ்நாட்டு முகாம்களில் காணப்படும் வசதிக் குறைபாட்டைப் பயன்படுத்தி அவர்களை அங்கிருந்து கடல்வழியாக அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்வதற்கான வாக்குறுதிகளை உள்ளுர் மற்றும் சிறிலங்காவைச் சேர்ந்த ஆட்கடத்தல் முகவர்கள் மேற்கொள்வதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆட்கடத்தல்களில் ஈடுபடும் முகவர்களுக்கு அவுஸ்திரேலியாவிற்குப் பயணிக்கும் ஒவ்வொருவரும் இந்திய ரூபாய் ஒரு இலட்சத்தைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என அகதிகளின் நலன்களில் கவனம் செலுத்தும் செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலுள்ள முகாம்களைச் சென்றடைந்த பின்னர் அகதிநிலை பெற்றுக்கொடுக்கப்படும் என ஆட்கடத்தல்காரர்கள் உறுதியளிக்கின்றனர்.
ஜூன் 02 ஆம் நாள், அகதி முகாம்களைச் சேர்ந்த 28 பேர், தமிழ்நாட்டிற்கும் ஆந்திர பிரதேசத்திற்கும் இடையிலுள்ள புலிக்கற் வாவி நோக்கி இரண்டு வான்களில் பயணித்த போதே கரையோர காவற்துறையினரால் வழிமறிக்கப்பட்டனர். 28 ஈழத்தமிழ் அகதிகளும் வான் சாரதிகள் இருவரும், முகவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அவர்களது முகாங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
‘ஆட்கடத்தல் முகவர்கள் சிலர் அகதிகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் அவர்கள் தமது படகிற்குச் செல்லும் வழியில் காவற்துறையினருக்குத் தகவலை வழங்கி அவர்களை வழிமறிப்பதற்கான தந்திரத்தை உபயோகிக்கின்றனர் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது’ என தமிழ்நாட்டு அகதி முகாங்களில் வாழும் மக்களுக்கான புனர்வாழ்வுச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் OfERR எனும் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.சி.சந்திரகாசன் தெரிவித்தார்.
சிறிலங்காவிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கிய கடல்வழிப் பயணமானது 2002ல் ஆரம்பமானது. சிறிலங்காவிலிருந்தும் சில படகுகள் அவுஸ்திரேலியாவை அடைந்துள்ளன. இவர்களில் 200 வரையானவர்கள் அவர்களது படகுகள் அலைகளில் சிக்குண்டதால் இறந்துள்ளனர்.
கிறிஸ்மஸ் தீவை அடைந்த 1600 வரையான மக்கள் நௌரு மற்றும் பப்புவா நியுகினியாவிலுள்ள தடுப்பு முகாங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் சிலர் அவர்களது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டு அகதி முகாங்களிலிருந்து 2008 தொடக்கம் இவ்வாறான கடல்வழிப் பயணங்கள் மூலம் அவுஸ்திரேலியா பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களுள் 400 வரையானோர் மலேசியா அல்லது அந்தமான் தீவுகளில் வைத்து இடைமறிக்கப்பட்டனர்.
இவ்வாறு இடைமறிக்கப்படும் அகதிகள் அறிவுறுத்தப்பட்டு மீண்டும் அவர்கள் தங்கியிருந்த முகாங்களுக்கு அனுப்பப்படுவர். இவர்களுக்கு எதிராக எந்தவொரு வழக்குகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆட்கடத்தல் முகவர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்ட போதும் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
தமிழ்நாட்டு காவற்துறையினர் மற்றும் இந்தியக் கரையோரக் காவற்துறையினரின் கண்காணிப்பின் மூலமே இவ்வாறான ஆட்கடத்தல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சந்திரகாசன் தெரிவித்தார். தனது நிறுவனமும் அவுஸ்திரேலிய அரசாங்கமும் இணைந்து மக்கள் மத்தியில் இவ்வாறான கடல்வழிப் பயணங்களின் ஆபத்துக்கள் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கமானது இதனை ஒருபோதும் வரவேற்காது போன்ற பல்வேறு விழிப்புணர்வுக் கருத்துக்களை வழங்கிவருக்கின்றன.
‘கடல்வழியாக அவுஸ்திரேலியாவிற்குத் தப்பிச் செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான அனுமதி வழங்கப்படமாட்டார்கள்’ என அவுஸ்திரேலியாவின் துணைத் தூதுவர் சீன் கெலி அண்மையில் சென்னையில் வைத்து ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
‘அவுஸ்திரேலியாவைச் சென்றடையும் அனைவரும் நௌரு மற்றும் பப்புவா நியுகினியிலுள்ள மனுஸ் தீவுகளுக்கு அனுப்பப்படுவர்’ எனவும் துணைத் தூதுவர் தெரிவித்தார்.
நாட்டின் உச்ச நீதிமன்றின் அறிவித்தலின் பிரகாரம் மனுஸ் தீவிலுள்ள அகதி முகாமை மூடவுள்ளதாக பப்புவா அரசாங்கம் அண்மையில் அறிவித்தல் மேற்கொண்டதாக சந்திரகாசன் தெரிவித்தார். இந்நிலையில் இந்த முகாமிலுள்ள 1200 அகதிகளுக்கு என்ன நடக்கும் என்பது உறுதியற்றது என சந்திரகாசன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் 107 அகதி முகாம்களில் 102,055 ஈழத்தமிழ் அகதிகள் வாழ்கின்றனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு மாதத்திற்கு 20 கிலோ அரசி வழங்கப்படுவதுடன், பிரதானமான பொருட்கள் நிவாரண அட்டை மூலம் வழங்கப்படுகிறது. அத்துடன் தரம் ஏழு வரை இலவசக் கல்வி வழங்கப்படுகிறது.
1990களில் தமிழ்நாட்டிற்கு வந்த பெரும்பாலான ஈழஅகதிகள் கல்விகற்று திருமணம் செய்து பிள்ளைகளுடன் வாழ்கின்றனர்.
மறுபுறத்தே, நௌரு மற்றும் பப்புவா முகாங்களில் அடிப்படை வசதிகள் காணப்பட்டாலும் கூட, வெளியில் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட மாட்டாது. மனுஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் அங்குள்ள உள்ளுர் மக்களுடன் கூடத் தொடர்பைப் பேணமுடியாத நிலை காணப்படுகிறது.
2009ல் சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்தபோதிலும், தமது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்குப் பலர் தயங்குகின்றனர். தமது வாழ்வாதரத்தைக் கொண்டு நடத்த முடியாது என்பதே அவர்களது கருத்தாகும்.
2002 தொடக்கம் 2014 வரையான காலப்பகுதியில் 12,500 வரையான ஈழத் தமிழ் அகதிகள் தமது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கு ஐ.நா அகதிகள் உயர் தானிகராலாயத்தின் இந்தியக் கிளை உதவியுள்ளது. இவ்வாண்டு இதுவரை 315 அகதிகள் சிறிலங்காவிற்குச் சென்றுள்ளனர்.
இந்தியாவில் வாழ விரும்பும் ஈழத்தமிழ் மக்களுக்கு குடியுரிமையை வழங்குமாறு தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க போன்றன தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் இந்திய மத்திய அரசாங்கமானது இக்கோரிக்கையை ஏற்பதற்குத் தயங்குகிறது. ஏனெனில் இதுபோன்றே பங்களாதேசில் இருந்து அசாமில் குடியேறியுள்ளவர்களும் குடியுரிமை வழங்குமாறு கோரலாம் என்பதே இந்தியா ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்குப் பின்னடிப்பதற்கான காரணமாகும்.