22 May 2016

கொழும்பில் வெள்ளம், காரணம் என்ன? விளக்குகின்றார் அதிகாரி

மழைக்காலங்களில் ஆறுகள் விரிவாக ஓடுவதற்கான நிலங்கள் குறைவடைதல், சட்டவிரோத கட்டடங்களை அமைத்தல், குப்பைகளை கொட்டுவதற்கு முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமை மற்றும் செயற்றின் அற்ற வடிகான் அமைப்பு முறையே கொழும்பு புறநகர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் புறநகர் பிரதேசங்களான களனி, உருகொடவத்தை, வெல்லம்பிட்டிய உள்ளிட்ட களனி ஆற்றை அண்மித்த பல பிரதேசங்கள் கடந்தவாரம் பெய்த கடும் மழையினால் வெள்ளத்தில் மூழ்கியது.
சுமார் 27 வருடங்களுக்கு பின்னர் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டதோடு, பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பிரதேசத்தில் வெள்ளம் இதுவரை முழுமையாக வடிந்தோடாத நிலையில் அரசாங்கமும், பொது அமைப்புகள் மற்றும் பொது மக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தாழ்நிலப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் டி.பி.அல்விஸ் ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
நகரை அண்மித்த வடிகான்களில் ஏற்பட்ட அடைப்பு வெள்ள நீர் ஆறு மற்றும் கடலை சென்றடைவதில் தடையை ஏற்படுத்தியதாகவும் அவர் குறி்ப்பிட்டுள்ளார்.
கால்வாய்கள் ஆறு மற்றும் கடல் மட்டத்தை விடவும் குறைந்த உயரத்தில் காணப்படுவதால் நீர் வெளியேற்றத்தில் தாக்கம் செலுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சதுப்பு நிலங்கள் அபிவிருத்திப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றமை வெள்ளப்பெருக்கு எறபடுவதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சதுப்பு நிலங்கள் மற்றும் ஆற்றை அண்மித்த நிலங்களில் அமைக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் வேறு கட்டடங்களே, களனி பிரதேசத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கிற்கு காரணமென டி.பி.அல்விஸ் தெரிவித்துள்ளார்.
27 வருடங்களுக்கு பின்னர் முதன் முறையாக களனி ஆற்றின் நீர்மட்டம் அசாதாரணமாக 7.3 அடிக்கு உயர்ந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 1989ஆம் ஆண்டு ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் களனி ஆற்றின் நீர் மட்டம் 7.8 அடியாக உயர்ந்ததோடு, இதனால் கொழும்பில் 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share: