26 Jun 2016

பிரித்தானியா விலகுவதற்கான வழிமுறைகள் குறித்து ஒன்றியம் விளக்கம்

பிரித்தானியாவில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட குடியொப்ப வாக்கெடுப்பு தொடர்பான கருத்துக்கணிப்பின் முடிவுகளின் படி, ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலக தீர்மானித்துள்ள நிலையில் முறைப்படி ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தை தொடர்பிலான வழிமுறைகளை ஐரோப்பிய ஒன்றியம் தெளிவுபடுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமரன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பதவி விலகவுள்ளதாகவும், அதன் பின்னர் அவரது பொறுப்புக்களை கையேற்பவர் பிரித்தானியா விலகுவது தொடர்பிலான அனைத்து கருமங்களையும் முன்னெடுப்பார் எனவும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், பிரித்தானியா வெளியேறுவது தொடர்பிலான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என ஒன்றியத்தில் உள்ள தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பில் எப்போது மற்றும் எவ்வாறு பிரித்தானியா உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் என பலர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
மேற்குறித்த நடவடிக்கைகள் 50 ஆவது சட்டப்பரிவில் உள்ளதை போன்று பின்பற்றப்படல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவருக்கு பிரித்தானியாவின் வெளியேற்றம் தொடர்பில் முறைப்படி கடிதம் ஒன்று அனுப்பப்படுதல் அல்லது முறைப்படி ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல் என்பனவே குறித்த சட்டம் ஆகும்.
முறைப்படி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share: