25 May 2016

ஸ்டாலின் வருவது ஜெயலலிதாவிற்கு தெரியாதாம்…

ஸ்டாலினையோ, தி.மு.க.வையோ அவமதிக்கும் எண்ணமில்லை, அவர் விழாவிற்கு வருவது தெரிந்திருந்தால் முதல் வரிசையிலேயே அமர வைக்க ஏற்பாடு செய்திருப்பேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்டாலின் வருவது தெரிந்திருந்தால் முதல் வரிசையிலேயே அமர வைத்திருப்பேன்: ஜெயலலிதா விளக்கம்
தமிழக முதல்வராக ஜெயலலிதா திங்கட்கிழமை பதவியேற்றுக் கொண்டார். முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளரும், கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். ஆனால், அவர் பின்வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார்.
இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. திமுக தலைவர் கருணாநிதி, ”முதல்வர் பதவியேற்பு விழாவில், தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு – அமர வைத்து, பிரதான எதிர்க் கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டது. ஜெயலலிதா திருந்தவே மாட்டார்” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் “பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான பகுதியில் ஸ்டாலின் அமர வைக்கப்பட்டுள்ளார். அதாவது விழாவில் பதவி வரிசைப்படி வி.ஐ.பி.-களுக்கு இடம் வழங்கப்பட்டது. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இடம், அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அது, ஸ்டாலினையோ அல்லது தி.மு.க.-வையோ அவமானப்படுத்துவதற்காக அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என்பதை அதிகாரிகள் என் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தால், மரபுப்படியான விதிகளை தளர்த்தி அவருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பேன்.
அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், மாநிலத்தின் நன்மைக்காக அவரது கட்சியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்.” என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Share: